வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது, அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓராயிரம் சிறப்பு வடிவங்களில் தொகுக்கப்பட்ட வந்தே மாதரம் பாடல் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார். மேலும், அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள கிராமபோன் ரெக்கார்டில் வந்தே மாதரம் பாடலை கேட்டு பிரதமர் மோடி மகிழ்ச்சியடைந்தார்.
இதனை தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் வந்தே மாதரம் பாடலை இசை கலைஞர்ககள் பாடினர். அப்போது, பிரதமர் மோடி எழுந்து நின்று அவர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலை பாடினார். வந்தே மாதரம் பாடல் ஒலித்தபோது அரங்கில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று பாடலை பாடினர்.
இதனை அடுத்து, வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழாவின் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பின்னர், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்துஸ்தானி, கர்நாடகா இசை கலைஞர்கள் கலந்து கொண்டு வந்தே மாதரம் பாடலை பாடினர். அப்போது, மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, இசை கலைஞர்களின் பாடல்களை கேட்டு ரசித்தார்.
















