வந்தே மாதரம் பாடல் அனைத்து மொழிகளிலும், ஒரு சமூக ஊடக பிரசாரமாக எடுத்து செல்லப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம், பாட்னாவில் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், அமித்ஷா தலைமையில் பாஜக நிர்வாகிகள் சுதேசி தொடர்பான தீர்மானத்தை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா, தேசத்தை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக வந்தே மாதரம் பாடல் தேசத்தை ஒன்றிணைத்து சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது என்றும், புரட்சியாளர்களிடையே தாய் நாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, பெருமை மற்றும் தியாக உணர்வை எழச்செய்தது எனவும் கூறினார்.
இளைஞர்களிடையே ஒற்றுமை, தேசபக்தி மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலின் ஆதாரமாக வந்தே மாதரம் பாடல் உள்ளது எனவும் கூறினார். மேலும், வந்தே மாதரம் பாடலை அவரவர் சொந்த மொழியில் எழுதக்கூடிய வகையில், அனைத்து மொழிகளிலும் ஒரு சமூக ஊடக பிரசாரம் நடத்தப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
















