ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விரைவில் விற்பனைக்கு வரக்கூடும் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது. இதுகுறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
இந்திய பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இந்நிலையில், மும்பை பங்கு சந்தையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, RCB அணியின் உரிமையாளரான UNITED SPIRITS LIMITED நிறுவனம், தங்கள் துணை நிறுவனமான ROYAL CHALLENGERS SPORTS PVT LTD நிறுவனம் மீது STRATEGIC REVIEW-ஐ தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்த அணியின் எதிர்கால உரிமைகள் குறித்த முக்கிய தீர்மானத்தை எடுப்பதாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
UNITED SPIRITS நிறுவனம் தனது தாய் நிறுவனமான DIAGEO குழுமத்துடன் இணைந்து, தனது பிரதான வணிகமான மதுபான உற்பத்தியை தொடர விரும்புகிறது. இதன் காரணமாக RCB அணியை அந்நிறுவனம் “முக்கியம் இல்லாத சொத்து” என வகைப்படுத்தவுள்ளதாக SEBI-க்கு அளிக்கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. DIAGEO நிறுவனத்தின் இந்த முடிவின் அடிப்படையில் அணி மீதான உரிமை விலகல் அல்லது புதிய முதலீட்டாளர்கள் சேர்க்கை ஆகியவை விரைவில் பரிசீலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, அணி விற்பனை தொடர்பான முடிவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் எடுக்க DIAGஏஓ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் RCB அணிக்கு புதிய உரிமையாளர் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. DIAGEO நிறுவனம் இந்தியாவில் தனது சொத்துக்களை மறுகட்டமைக்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், விளையாட்டு சார்ந்த சொத்துக்கள் அதன் முக்கிய வணிக நோக்கங்களுக்கு பொருந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது RCB ரசிகர்களிடையே ஒருபுறம் ஆவலையும், மற்றொருபுறம் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி, ஃபாப் டூ பிளெஸிஸ் போன்ற முன்னணி வீரர்களை கொண்டுள்ள RCB அணி, IPL வரலாற்றில் மிகுந்த பிரபலத்தையும், வணிக மதிப்பையும் பெற்ற அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த விற்பனை அல்லது உரிமையாளர் மாற்றம் அணியின் எதிர்காலத்தையும், அதன் பிராண்ட் மதிப்பையும் பாதிக்கக்கூடியதாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
RCB அணியின் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகாவிட்டாலும், அதன் உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை, அணியின் எதிர்காலம் குறித்த மிகப் பெரிய முடிவுக்கு அடித்தளமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
















