மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்படுத்துவதாக வெளியான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் 31 ஆம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் 13 சதவீத மசோதாக்கள் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீதமுள்ள மசோதாக்கள் அக்டோபர் கடைசி வாரத்தில் பெறப்பட்டு, தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக 73 மசோதாக்களுக்கு ஒரே வாரத்திலும், 61 மசோதாக்களுக்கு ஒரு மாதத்திலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
மேலும் தமிழக மக்களின் நலனை பாதுகாக்க ஒவ்வொரு மசோதாவையும் உரிய கவனத்துடன் ஆளுநர் பரிசீலித்துள்ளதாகவும், எந்தவொரு அரசியல் சார்பையும் பொருட்படுத்தாமல் அரசியலமைப்பு கடமைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றி வருவதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
















