திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயனூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சுப்பிரமணி என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இது குறித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், நிலம் சுப்பிரமணிக்கு சொந்தமானது என நீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இந்த நிலையில், சுப்பிரமணி அவருடைய நிலத்தில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அசோக் குமாரும் அவருடைய மகன் சூர்யாவும் சேர்ந்து சுப்பிரமணியை மண் வெட்டியால் வெட்டி கொலை செய்ததும், முன்னாள் கவுன்சிலர் இன்பராஜ் மற்றும் அவரது மகன் சதீஷ் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
















