இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையுலகில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு மரியாதை செய்யப்பட உள்ளது.
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவின் பனாஜியில் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. வழக்கமாக மூடிய அரங்கிற்குள் நடைபெறும் தொடக்க விழா, இந்த ஆண்டு முதல் முறையாக வீதிகளில் ஒரு பிரமாண்ட கார்னிவல் ஊர்வலத்துடன் தொடங்குகிறது. இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு விழா நிறைவு நாளில் கௌரவம் அளிக்கப்பட உள்ளது.
இந்த திரைப்பட விழா குறித்த செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று, திரைப்பட விழாவின் முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசினார். அப்போது ஒவ்வொரு ஆண்டும், இன்றைய தலைமுறையினருக்கான பிரத்யேக மேடையை மத்திய அரசு உருவாக்கி வருவதாக கூறினார்.
மேலும், நாட்டின் 75வது சுதந்திர விழா ஆண்டு கொண்டாட்டத்தின் போது, 75 புதிய இளம் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலிருந்து கிட்டத்தட்ட 125 இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் குறித்து பேசிய அவர், இது ஒவ்வொரு குடிமகனின் பெருமை என்றும், இதனை கொண்டாட பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
















