தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கோவை மாவட்டம் தமிழகம் – கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில், தமிழக பதிவெண் கொண்ட 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை, கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று திடீரென சிறைபிடித்தனர். சாலை வரி செலுத்தவில்லை என கூறி அம்மாநில அதிகாரிகள், ஒவ்வொரு பேருந்துக்கும், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்று முதல் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக – கேரள எல்லையான வாளையாறு சோதனைச்சாவடி வரை மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. எல்லையில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஓட்டுநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே மத்திய அரசின் சுற்றுலா வாகனங்களுக்கான உரிமம் பெற்று நாடு முழுவதும் வாகனங்களை இயக்கி வருவதாகவும் கேரள அதிகாரிகள் திடீரென சாலை வரி செலுத்தவில்லை என கூறி அபராதம் விதிப்பதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். இவ்விகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















