இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி, ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான மைக் டிவைனின் பதவிக்காலம் இரண்டாவது முறையாக முடிவடைய உள்ளது.
இதனால் ஓஹியோவின் அடுத்த கவர்னரை தேர்ந்தெடுப்பதற்காக, அடுத்த வருடம் நவம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுபவர் 2027-ம் ஆண்டு, ஜனவரி 11ம் தேதி பதவியேற்பார். அமெரிக்காவின் வழக்கத்தின் படி தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாகவே வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.
அந்தவகையில், குடியரசு கட்சியைச் சேர்ந்தவரும், இந்திய வம்சாவளியுமான விவேக் ராமசாமி ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விவேக் ராமசாமி ஒரு நல்ல மனிதர், அவர் உண்மையிலேயே அமெரிக்காவை நேசிக்கிறார் எனக் கூறியுள்ளார். மேலும், அவர் ஒருபோதும் அமெரிக்க மக்களை ஏமாற்ற மாட்டார் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
















