ஆப்கானிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனப் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர்கள்மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் தாக்குதல் நடத்தியதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
பின்னர் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இதனிடையே வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான தாக்குதலில், ஆப்கனைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இதனால் இரு தரப்பிடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும், நான்காவது சுற்று பேச்சுவார்த்தைக்கான எந்தத் திட்டமும் இல்லை என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ள கவாஜா ஆசிப், தாக்குதல்கள் தூண்டப்பட்டால் பாகிஸ்தான் கடுமையான பதிலடியை கொடுக்கும் எனவும் கூறினார்.
















