ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் 44 இந்தியர்களை உடனடியாக விடுவிக்குமாறு, அந்நாட்டை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தங்கள் நாட்டினரின் உயிரிழப்பைத் தவிர்க்க, பிற நாட்டைச் சேர்ந்தவர்களையும் ரஷ்யா தனது ராணுவத்தில் சேர்த்து வருகிறது.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ஆட்சேர்ப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து, தற்போது 44 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம்குறித்து ரஷ்ய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறிய ரந்தீர் ஜெய்ஸ்வால், ரஷ்ய ராணுவத்தில் இந்திய குடிமக்களைச் சேர்ப்பதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய ராணுவப் பிரிவுகளில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
















