ஈரானில் 22 மாகாணங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீர் வழங்கும் முக்கிய அணைகள் வறண்டதால் மக்களின் தாகத்தை தீர்க்க முடியாமல், அரசு தடுமாறி வருகிறது.
கடுமையான வறட்சி… சுட்டெரிக்கும் வெப்பம்… 50 டிகிரி செல்சியஸை தாண்டிப் பதிவான வெயில் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு பரிதவித்து வருகின்றனர் ஈரான் மக்கள்.. கடும் தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை போன்ற காரணங்களால் 22 மாகாணங்களில் அரசு அலுவலகங்களுக்கு அவ்வப்போது விடுமுறையையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தலைநகர் டெஹ்ரானும் விதிவிலக்கல்ல… அங்கு முன்னெப்போதும் இல்லாத கடுமையான வறட்சி நிலவுகிறது.
தொடர்ச்சியாக 6வது ஆண்டாக வறட்சி நிலவும் நிலையில், சில அணைகளில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான கொள்ளளவே தண்ணீர் உள்ளன. டெஹ்ரானின் கிழக்கில் உள்ள 5 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான லத்யன் அணையில் 9 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால் நிலைமை மோசமாக உள்ளதாக ஈரான் அரசு கூறியுள்ளது.. டெஹ்ரானின் அணைகள் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்திற்குச் சென்றுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாத இறுதிக்குள் மழை பெய்யவில்லை என்றால் டெஹ்ரானில் இருந்து மக்கள் வெளியேற வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுமார் ஒரு கோடி பேர் வசிக்கும் டெஹ்ரான், நீர் மின்சாரத்தை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் ஆறுகள் மற்றும் ஈரநிலங்கள் வறண்டுவிட்டதால், மின் உற்பத்தி சரிந்துள்ளது.
சில மின் நிலையங்கள் குளிர்விக்கும் நீர் இல்லாததால் ஆஃப்லைனில் உள்ளன. ஈரானின் எரிசக்தி அமைப்பு, நீர் மின்சாரம் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை அதிகம் சார்ந்துள்ளது, அதே நேரத்தில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை ஆகியவை மொத்த திறனில் ஒரு சிறிய பகுதியாகவே உள்ளன. தடைகள், முதலீட்டாளர்களின் சந்தேகம் மற்றும் பல தசாப்தங்களாக முதலீடு குறைவாக இருப்பது ஆகியவை பல்வகைப்படுத்தல் முயற்சிகளை முடக்கியுள்ளன.
ஈரானின் நன்னீரில் சுமார் 80% விவசாயத்திற்கு இன்னும் தேவைப்படுகிறது, திறனற்ற நீர்ப்பாசனம், ஈரானின் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாகப் பார்க்கப்படும் நிலையில், நீர்ப்பாசன திட்டங்களை மேம்படுத்தினால் மட்டுமே, தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்கின்றனர் நீர்வளத்துறை நிபுணர்கள்.
















