இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் என ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
அந்த வகையில் ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சரான அலெக்ஸ் வெல்டர் என்பவர் தெற்கு கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தெற்கு கோவாவின் கல்கிபாகா கடற்கரைக்குச் சென்ற அலெக்ஸ், இந்தியாவிலேயே தூய்மையான பகுதி இதுதானென தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாகக் கோவா குப்பைகள் நிறைந்த இடமாக இருக்கும் என நினைத்ததாகக் கூறியுள்ள அலெக்ஸ், தெற்கு கோவாவில் உள்ள கடற்கரையில் ஒரு குப்பை துண்டைக் கூடப் பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், கடற்கரையின் ஓரங்களிலேயே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தியா குப்பை, கூளங்கள் நிறைந்த சுகாதாரமற்ற நாடு என்பதை போல வேண்டுமென்றே பதிவிடும் சுற்றுலா பயணிகளுக்கு மத்தியில் உண்மையைக் கூறிய அலெக்ஸ் வெல்டரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
















