கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் குற்றவாளிகள் செல்போன் பயன்படுத்துவதுடன், டிவி பார்க்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தொடர் பாலியல் வன்கொடுமை செய்து 18 பெண்களை கொன்ற உமேஷ் ரெட்டி என்பவரும், நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய தருண் ராஜூ என்பவரும் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் சிறையில் சர்வ சாதாரணமாகச் செல்போன்களை பயன்படுத்துவது, டிவி பார்க்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்த வீடியோவில், பாலியல் வன்கொடுமை குற்றவாளியான உமேஷ் ரெட்டியின் அறையில் தனி டிவி இருப்பதும், அவர் செல்போனில் சிலருடன் பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
அதே போலத் தருண் ராஜூ செல்போனில் யூடியூபை பார்த்துச் சமையல் செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வைரலான நிலையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
















