ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது… வீறு கொண்ட எழுந்த இந்திய அணி, 3வது மற்றும் 4வது டி20 போட்டிகளில் வென்று தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இந்தநிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரிஸ்பேனில் 5வது டி20 போட்டி நடைபெற்றது… டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. வழக்கம்போல் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய சுப்மன் கில் – அபிஷேக் சர்மா இணை ஆஸ்திரேலிய பந்துவீச்சை தகர்த்தெறிந்தது.
இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்த ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இப்போட்டியில் அபிஷேக் சர்மா 11 ரன்களை எட்டியபோது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விரைவாக ஆயிரம் ரன்கள் எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 4.5 ஓவரின் மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது.
நீண்ட நேரமாக மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில் மழையால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.. அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 23 ரன்களும், சுப்மன் கில் 16 பந்துகளில் 29 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்தத் தொடரில் ஏற்கனவே 2-க்கு 1 என முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை வென்று அசத்தியது. தொடர் நாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
















