தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரத்தில் சமண மதத்தின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லி, விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சமண மத ஆச்சார்யர் ஹன்ஸ்ரத்னா சூரிஷ்வர்ஜி மகாராஜின் எட்டாவது 180 உபவாச பர்ண விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், உலகின் பழமையான மதங்களில் ஒன்றான சமண மதத்தின் அஹிம்சை , சத்தியம், அபரிகிரஹா, அனேகாந்தவாத ஆகிய போதனைகள் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது பெருமைக்குரியது எனக்கூறிய அவர், சமண மதத்தின் கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்க ஞான பாரதம் இயக்கம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சமண மதம் பரவிய வரலாறும், தமிழ் கலாசாரத்தில் அதன் பரந்த செல்வாக்கும் குறிப்பிடத்தக்கது என்றும், சங்க காலம் முதலே தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை இதற்கு சிறந்த உதாரணமாக கூறிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருக்குறள், சங்க இலக்கியம் போன்ற நூல்கள் சமண மதத்தின் தாக்கங்களைக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
















