கோவையில் உள்ள பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகளை திருடிய 7 ஊழியர்களைப் போலீசார் கைது செய்தனர்.
கோவையில் உள்ள தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கிற்கு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பெயரில், 7 கிலோ எடைகொண்ட சோப்பு பவுடருக்கான பார்சல் ஆர்டர் வந்துள்ளது.
அந்த ஆர்டருக்குரிய பார்சலை சோதித்து பார்த்தபோது, அதில் மடிக்கணினிகள் இருந்தது தெரியவந்தது. முதலில் இந்தச் சம்பவம் தவறுதலாக நடந்திருக்கும் என நினைத்த சோதனை பிரிவினர், தொடர்ந்து அதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அதே கிடங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள், சோப்பு பவுடரை ஆர்டர் செய்து, அந்தப் பார்சலில் மடிக்கணினிகளை வைத்துத் திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது.
இந்தத் திருட்டு நாடகம் தொடர்பாக நிறுவன அதிகாரி சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்மந்தப்பட்ட ஊழியர்களான விக்னேஷ், கிஷோர், சஞ்சய் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அஞ்சலி என்ற பெண்ணைத் தேடி வருகின்றனர்.
















