ஒருவர் உயிரிழந்த பிறகு இரத்த ஓட்டத்தை மீண்டும் தொடங்கச் செய்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக எடுத்து டெல்லி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டெல்லி துவாரகா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், பக்கவாதத்தால் சிகிச்சை பெற்று வந்த பெண் கடந்த 6ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, பெண்ணின் விருப்பப்படி அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
தொடர்ந்து, அவரது இதயம் செயலிழந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பிரேன் ஆக்சிஜனேட்டரை பயன்படுத்தி, நார்மதர்மிக் ரீஜினல் பெர்ஃபியூஷன் எனப்படும் அரிய மருத்துவ முறைப்படி அவரது வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டத்தை மருத்துவர்கள் மீண்டும் தொடங்கினர்.
இவ்வாறு செய்வதால் அவரது வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளைச் செயலிழக்கவிடாமல் செய்து, அவற்றைப் பாதுகாப்பாக எடுத்துத் தானம் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவர் உயிரிழந்த பின்பும் மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் அவரது உடலில் இரத்த ஓட்டத்தைத் தொடங்கி, உறுப்புகளைத் தானமாகப் பெறுவது ஆசியாவிலேயே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
















