தாம்பரம் மண்டலத்தில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு 3வது முறையாக ரத்து செய்யப்பட்டதால், தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய்த்துறையில் 26 இடங்களுக்கான கிராம உதவியாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. தாம்பரம் மண்டலத்தில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர் பதவிகளுக்கான தேர்வுகள் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நடைபெறவிருந்த தேர்வுக்குக் காலை ஒன்பதரை மணிக்கு ஏராளமானோர் வருகை தந்தனர்.
அப்போது, எந்த அறிவிப்பு பலகையும் வைக்காமல் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகப் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக இளைஞர்கள் வேதனை தெரிவித்தனர்.
தொடர்ந்து 3வது முறையாகத் தேர்வுத் தேதியை அறிவித்துவிட்டு ரத்து செய்வது வேதனை அளிப்பதாகவும் கூறினர். மேலும், எந்தவித காரணமும் இல்லாமல் அலைகழிப்பு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
















