திராவிட சித்தாந்தம் என்பது அரசியல் மட்டுமே என்றும், தமிழகத்திலும் இந்து ராஜ்ஜியம் உள்ளது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் கலாச்சார மற்றும் மத நடைமுறைகளைச் சுட்டிக்காட்டினார்.
தமிழக மக்கள் கோயில்களுக்குச் செல்லவில்லையா? சிலை வழிபாட்டை ஒதுக்கி வைக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், பசுக்களுக்காக ஒரு நாள் அர்ப்பணிக்கப்பட்ட 3 நாட்கள் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அனைத்து மதங்களும் சமம் என்பதை ஒப்புக்கொண்டவர்கள் அனைவரும் இந்துக்கள் எனத் தெரிவித்த அவர், திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இந்துக்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
திராவிடக் கட்சிகள் இந்து மதத்திலிருந்து பகிரங்கமாக விலகி இருக்கிறது என விமர்சித்த மோகன் பாகவத், இந்துக்கள் என்பதை மறுத்தாலும், அவர்களின் இதயங்களில் இந்துக்கள் என்பதை அறிவார்கள் எனக் கூறினார்.
தமிழ் கலாச்சார வெளிப்பாட்டில் இந்து மதம் வேரூன்றியுள்ளது எனவும் கூறினார். மேலும், திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் இயல்பிலேயே இந்துக்கள் என்றும், அவர்கள் எங்கும் செல்லப்போவதில்லை எனவும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
















