மேலூர் அருகே செக்கடி பஜாரில் பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாகி உள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அதிகாலை 5 மணி அளவில் மணிமாறன் என்பவரை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், கொலையைக் கண்டிக்கும் வகையில் திமுக நிர்வாகி அபு என்பவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், காவல்துறையின் செயல்பாடுகள் கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், காவல்துறையின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் மூர்த்தி, எம்பி சு.வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரை டேக் செய்து திமுக நிர்வாகி வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது.
















