சூதாட்டத்திற்கு பெயர் போன, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரம் தற்போது தனது பொழிவை இழந்துள்ளது. அங்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
அமெரிக்கா என்றவுடன் சட்டென்று நமது நினைவுக்கு வரும் இடங்களில் கேசினோக்களும் ஒன்று. குறிப்பாக, லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கேசினோக்கள் உலக புகழ் பெற்றவை. கேசினோக்களை தவிர்த்து, அங்குள்ள இரவு நேர கேளிக்கை விடுதிகள், பிரமாண்டமான ஹோட்டல்கள், வானுயர்ந்த கட்டடங்கள் ஆகியவை, உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.
உலகின் சூதாட்ட தலைநகரம் என அழைக்கப்படும் லாஸ் வேகாஸ் நகருக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள், இரவுநேரத்தில் தங்க விடுதி அறை கிடைக்குமா என்று கவலைப்படவே தேவையே இல்லை.
ஏனென்றால், அனைவரையும் மலைக்க வைக்கும் அளவுக்கு, அந்நகரம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் விடுதி அறைகளை கொண்டுள்ளது. இதில் இருந்தே அந்நகர் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா மற்றும் கேளிக்கை தலம் என்பதை அறிந்துகொள்ளலாம். லாஸ் வேகாஸ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 70 சதவீதம் பேர், தவறாமல் கேசினோக்களுக்கு சென்று சூதாட்டங்களில் ஈடுபடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், லாஸ் வேகாஸ் குறித்த இந்தப் பெருமைகளும், புள்ளி விவரங்களும் தற்போது பழைய கதையாகிவிட்டன. கடந்த சில ஆண்டுகளாக லாஸ் வேகாஸ் நகருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. பல கேசினோ அரங்குகள் ஈ ஓட்டும் அளவிற்கு, ஆள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன.
இன்றைய தேதிக்கு மொத்தமுள்ள ஒன்றரை லட்சம் விடுதிகளில் ஐந்தில் ஒரு பங்கு விடுதிகள் நிறைந்திருந்தாலே ஆச்சரியம். அந்த அளவுக்கு, லாஸ் வேகாஸ் நகரமும், கேசினோ அரங்குகளும் தங்களது பொழிவை இழந்து வருகின்றன. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு பயணிகளின் வருகை 8 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2008ம் ஆண்டுக்குப் பிறகான மிகப்பெரிய சரிவாக இது கருதப்படுகிறது. பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்க கேசினோ விடுதிகளும், ஹோட்டல்களும் கட்டண குறைப்பை அறிவித்தன.
இருப்பினும், அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முதன்மையானது, பொருளாதாரம் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வு. அமெரிக்க மக்கள் பணவீக்கம் வட்டி விகிதங்கள் உயர்வு, விலைவாசி அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, அவர்களுக்குப் பிடித்த சுற்றுலா தலங்களின் பட்டியலில் முதன்மையிடம் பிடித்திருந்த லாஸ் வேகாஸ், தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது. அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு பயணிகளும் இதே மனநிலையில்தான் உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து லாஸ் வேகாஸ் நகருக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்திருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. இதன் காரணமாக அந்நகரில் சுற்றுலா பயணிகளையும், சூதாட்ட விரும்பிகளையும் நம்பியிருந்த ஆயிரக்கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை கட்டாயம் மாறும் என்றுதான் அங்குள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த மாற்றம் ஓரிரவில் நடக்க வாய்ப்பில்லை என்பதையும் அவர்கள் உணர்ந்துதான் உள்ளார்கள். லாஸ் வேகாஸ் நகரில் பயணிக்க வேண்டும் என்றால், இரவில்கூட சன்கிளாஸ் தேவைப்படும் எனக் கூறப்படுவதுண்டு.
அந்தளவுக்கு அந்நகரம் இரவு நேரத்திலும் மிகப் பிரகாசமாக உயிர்ப்புடன் இருக்கும். ஆனால், தற்போது பகல் நேரத்தில்கூட அந்நகரத்திற்கு சன்கிளாஸ் அணிந்து வர சுற்றுலா பயணிகள் இல்லை என்பதுதான் ஆகப்பெரும் துயரம்.
















