விசில் அடித்து மற்றவரை அழைக்கும் விநோத கிராமத்தைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள அப்படியொரு வியத்தகு கிராமத்தைப் பற்றித் தற்போது பார்க்கலாம்..
விசில் தான் எங்கள் மூச்சு.. விசில் தான் எங்கள் பேச்சு… என மெல்லிய இசை ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்தக் கிராமம் இந்தியாவின் விநோதமான கிராமமாக அறியப்படுகிறது விசில் கிராமம். பசுமையான மேகாலயா மாநிலத்தின் காசி மலை மாவட்டத்தில் உள்ள காங்தாங் கிராமம்தான், இந்தச் சிறப்புக்குரியது.
யாரோ ஒருவர் உங்கள் பெயரைக் கேட்பதை கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் செய்வதெல்லாம் ஒரு மாயாஜால ஒலியை எழுப்புவதுதான். இது அற்புதமாக இருக்கிறது சரிதானே? மேகாலயாவின் காங்தாங் கிராமத்தில் 700 பேர் வாழும் நிலையில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தனித்துவ விசில் சத்தம் பெயராகவே வைக்கப்படுவது வியப்பிலும் வியப்பாக உள்ளது.
அதாவது காங்தாங் கிராமத்தில் ஒரு குழந்தை பிறந்ததும், அதன் தாயார், தனது குழந்தைக்குச் சாதாரண பெயரோடு, பிரத்யேக டியூனையும் அதாவது விசில் போன்ற இசையையும் பெயராக வைத்துவிடுவாராம்.
அதில் ஒன்று ஷார்ட் சாங், மற்றொன்று லாங் சாங். இந்த ஷார்ட் சாங் வீட்டிலிருப்பவர்கள் அழைப்பதற்காக, லாங் சாங் ஊ பயன்பாட்டிற்காகவாம். இங்குச் சாதாரணமாக ஒருவரது பெயரைச் சொல்லி அழைப்பது என்பது அரிதிலும் அரிதாகவே பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் கிராம மக்களுக்கு இடையேயான உரையாடலும் விசில் வடிவிலேயேதான இருக்குமாம்… இந்த விசித்திரமான பழக்கம், அவர்களுக்குள் உள்ள அன்பு, அடையாளம், பாரம்பரியம் போன்றவற்றோடு கலந்து, வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இந்த இசை வடிவத்தினை, ‘ஜிங்கர்வை லாபெய்’அதாவது அம்மாவின் அன்பு பாடல் என்று அழைக்கிறார்கள்.
காங்தாங் கிராமவாசிகள் பறவைகள் மற்றும் விலங்குகளைப் போலவே தங்கள் செய்திகளைத் தங்கள் சக கிராம மக்களுக்குத் தெரிவிக்க விசில் அடிப்பதை ஒரு முறையாகப் பயன்படுத்துவதால் இது விசில் கிராமம் என்ற பெயரைப் பெற்று நிற்கிறது.. 700 குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்தக் கிராமம் 2022ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா கிராம விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
















