காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் செயலாளர், விஜயராகவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிகம் திரண்டு பயன்பெறும் கலையரங்கம் பகுதியில் மேல் கூரை மற்றும் உள்கட்டமைப்பு பல இடங்களில் பழுதடைந்ததுடன், முற்றிலும் பராமரிப்பு இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலிருந்து விழும் இதழ்கள் மற்றும் இரும்புப் பொருட்கள் மாணவர்களின் தலையில் விழும் அபாயம் மிகுந்து காணப்படுகிறது.
மழைக்காலத்தில் நீர் வடிதல், இரும்புக் கட்டமைப்பில் அதிக ஜங்கு, பராமரிப்பின் முழு பற்றாக்குறை ஆகியவை, நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது.எனவே நிர்வாகத் திறனற்ற துணைவேந்தரை பதவியை விட்டு விலக வேண்டும், மாணவர்களின் உயிர் பாதுகாப்பை ஏற்கனவே மீறிய இந்த நிலை தொடர்வது ஏற்க முடியாதது.
அதே நேரத்தில், இவ்வளவு மோசமான உள்கட்டமைப்புடன் இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு NAAC A++ தரச்சான்று வழங்கப்பட்டிருப்பது எப்படி? இது ஆய்வு குழுவின் மதிப்பீட்டு முறையே கேள்விக்குறியாகிறது.
எனவே, கலையரங்கத்தின் தற்போதைய சேதமடைந்த கட்டமைப்பை உடனடியாக மூடி, மாணவர்கள் அங்குச் செல்லாத வகையில் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும், விரைவான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் நிபுணர் குழுவின் மூலம் கட்டமைப்பு வலிமை மதிப்பாய்வு நடத்தப்பட வேண்டும், பழுது செய்யும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் வெளிப்படை அறிக்கை வடிவில் வெளியிடப்பட வேண்டும், துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும்.
மாணவர்களின் உயிர் பாதுகாப்பு எந்தச் சான்றிதழையும் விட முக்கியமானது. மாணவர்களை ஆபத்தில் இட்டுச் செல்லும் அலட்சிய நிர்வாக மனப்போக்கை கண்டிப்பதோடு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்வரை போராட்டங்களும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
















