இந்தியாவை தொடர்ந்து சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் என்று வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸின் இந்திய எதிர்ப்பு கருத்துக்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான வெளிநாட்டு ஆதரவு பிரச்சாரங்களுக்கு எப்போதும் கடுமையான பதிலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனுக்குடன் கொடுத்து வருகிறது. வங்கதேசத்தில், மாணவர் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஜனநாயக ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து, யூனுஸ் இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வார்த்தைகளை முன்வைத்து வருகிறார். வங்க தேசத்தில் ஒரு அடிப்படைவாத இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான சதி நடக்கிறது என்று வங்கதேச சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. குறிப்பாக, ஜமாத் மற்றும் ஹெஃபாசத்-இ-இஸ்லாம் போன்ற அமைப்புகளின் ஒரே ஒரு கோரிக்கையாகக் கஸ்வதுல் ஹிந்த் அதாவது முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிரான போர் மட்டுமே உள்ளது.
அதன் நீட்சியாக ‘இஸ்லாமிய வங்காளதேசத்தை உருவாக்கவும் திட்டமிட்டு வருவதாகவும் அந்நாட்டின் இடைக்கால அரசின் ஆலோசகர் யூனுஸும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், பாகிஸ்தானின் கூட்டுப் பணியாளர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சாவுக்கும், மெஹ்மத் அகீஃப் யில்மாஸ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட துருக்கி நாடாளுமன்றக் குழுவினருக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய ‘கிரேட்டர் பங்களாதேஷ்’ வரைப்படத்தைப்பரிசாகக் கொடுத்து முகமது யூனுஸ் புயலைக் கிளப்பினார்.
இந்தச் சூழலில், டாக்கா பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு வரலாற்று கண்காட்சியின் போது, ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்தின் ஒருபகுதியாகக் காட்டும் ‘கிரேட்டர் பங்களாதேஷ்’ என்ற சர்ச்சைக்குரிய வரைபடங்கள் பல்கலைக்கழக வளாகச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன.
டாக்காவில் உள்ள ‘சல்தானத்-இ-பங்களா’ என்ற இஸ்லாமியக் குழு, ‘துருக்கி இளைஞர் கூட்டமைப்பு’ என்ற துருக்கியின் தன்னார்வ அமைப்பின் ஆதரவுடன், இல்லாத ‘கிரேட்டர் பங்களாதேஷ்’ என்ற ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். துருக்கி இளைஞர் கூட்டமைப்பு, மனிதாபிமான உதவிகளைச்செய்வதாகக் கூறினாலும், அடிப்படைவாத இஸ்லாமிய கருத்துக்களைஇளைஞர்களிடையே பரப்பி வருவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, இஸ்லாமிய தீவிரவாத நெட்வொர்க்கில் இணைந்துசெயல்பட்டுவருவதாகச் சர்வதேச அளவில் விசாரணைகள் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் ‘நிலத்தால் சூழப்பட்ட’ வடகிழக்கு மாநிலங்களில், சீனா தனது பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்தத் தங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என வங்கதேசம் கூறியது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அதன் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான இணைப்பான ‘சிக்கன்ஸ் நெக்’ வழித்தடத்துக்கு அருகில், வங்கதேசத்தில் ஒரு விமான ஓடுபாதையை கட்டுவதற்கு சீனாவுக்கு அனுமதி அளித்தது, சிக்கன்ஸ் நெக் அருகில் உள்ள நதி பாதுகாப்பு திட்டத்தில் பங்கேற்க சீனாவையும் அழைத்தது என இந்தியாவுக்கு எதிரான கருத்துகளையே யூனுஸ் தெரிவித்து வருகிறார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா யாரையும் சீண்டுவதில்லை, ஆனால் யாராவது இந்தியாவைச் சீண்டினால், அவர்களைச் சும்மா விடமாட்டோம் என்று எச்சரித்திருந்தார்.
மேலும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கும் யூனுஸ் தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் இந்தியா உறுதியாக இருந்தாலும், இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு சவாலுக்கும் உறுதியான பதில் அளிக்கப்படும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த வங்க தேசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மஹ்புபுல் ஆலம், இந்தியாவுடன் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுக்கு நாடு உறுதிபூண்டுள்ளதாகவும், இறையாண்மை சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
















