இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான மஹிந்திரா நிறுவனத்தின் THAR வாகனத்தை வைத்திருப்பவர்கள் பித்து பிடித்தவர்கள் என்று ஹரியானா டிஜிபி தெரிவித்திருப்பது வாத, பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது… அவர் அவ்வாறு கூற காரணம் என்ன?… விரிவாகப் பார்க்கலாம்.
ஹரியானா மாநில டிஜிபி ஓ.பி.சிங் அண்மையில் அளித்த பேட்டிதான் சர்ச்சைக்குக் காரணம்…THAR வாகனத்தை வைத்திருப்பவர்கள் நிச்சயம் பித்து பிடித்தவர்கள், வெறி பிடித்தவர்கள் என்று முத்திரை குத்தும் வகையில் பேட்டி அளித்திருந்தார் அவர். இந்தக் கருத்து இணையத்தில் காட்டுத் தீப்போன்று பரவி வருகிறது.
அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. முரட்டுத்தனமான தோற்றம், ஆப் ரோடு, ஆன் ரோடு என எங்கும் ஃபெர்பார்மன்ஸ் காட்டும் திறனால், இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது மஹிந்திரா நிறுவனத்தின் THAR வாகனம். தார் உண்மையிலேயே பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாலும், அந்த காரை வைத்து இளைஞர்கள் செய்யும் அட்டகாசம், அதனை வைத்திருப்பவர்களை வேறு பிம்பத்தில் காட்டுகிறது.
தார் கார் உரிமையாளர்கள் செய்த ரகளைகளும், ஸ்டண்ட் வீடியோக்களுமே இதற்கு உதாரணம்… தார் வாகன உரிமையாளர்கள், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வலம் வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.. பெரும்பாலான HIT AND RUN வழக்குகள் தார் வாகனங்களை இயக்குபவர்களாலேயே திணிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் ஹரியானா மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் சிங்கும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹரியானாவில் அசிஸ்டண்ட் கமிஷனரின் மகன், தார் காரை ஓட்டிச் சென்றபோது ஒருவர் மீது மோதியதை சுட்டிக்காடடிய அவர், அந்த தார் கார் காவலர் பெயரில் இருப்பதையும், அதனாலேயே அவர் முரட்டுத்தனமான நபர் என்றும் கூறியிருக்கிறார்.. ஒருவேளை நாம் காவலர்களின் பட்டியலை உருவாக்கும்பட்சத்தில், அதில் எத்தனை பேரிடம் தார் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் பித்து பிடித்தவர்களாகத் தான் இருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
தார் என்பது ஒரு கார் இல்லை, தான் எப்படிப்பட்டவன் என்பதற்கான அறிக்கை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். வாகன சோதனையில் பின்பற்றப்படும் வழிமுறைகளை விளக்கிய அவர், அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்துவதில்லை என்றும், தார் கார் என்றால் சோதிக்காமல் விட முடியாது என்றும் புன்சிரிப்புடன் கூறினார். தார் காரையும், புல்லட் போன்ற இருசக்கர வாகனங்களையும் முரட்டுத்தனமான நபர்களே பயன்படுத்துவதாகக் கூறிய அவர், நீங்கள் தேர்வு செய்யும் வாகனம் உங்களையே பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.
சமீப காலமாக ஆன்லைனில் ஸ்டண்ட் செய்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதற்கு தார் கார் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விபத்துகள் அதிகரித்திருப்பதை மறுக்கவும் முடியாது. எனவேதான் தார் போன்ற முரட்டுத்தனமாகக் கார் வைத்திருப்பவர்களை எச்சரிக்கும் வண்ணம் ஹரியானா டிஜிபி-யின் கருத்து வெளிப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான NCRB தரவுகளின்படி, இந்தியாவில் 4.64 லட்சம் சாலை விபத்துகளும் 1.74 லட்சம் இறப்புகளும் பதிவாகியுள்ளன, வேகமே முதன்மையான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து மற்றும் குற்ற புள்ளிவிவரங்கள் வாகனத்தின் மாடலால் பிரிக்கப்படவில்லை, இதனால் ஒரு குறிப்பிட்ட SUVக்கும் அதிக ஆபத்துக்கும் இடையே எந்த ஆதார அடிப்படையிலான தொடர்பையும் வரைய முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வாகனம் என்பது பயணம் செய்வதற்கான தவிர, தாறுமாறாக இயக்கி உயிர்களை காவு வாங்குவதற்காக அல்ல என்பதை வாகனத்தை இயக்குபவர்கள் உணர வேண்டியதே இதில் அவசியமாகிறது.
















