டெல்லி சதி சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனப் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
இரண்டு 2 நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார். தொடர்ந்து தலைநகர் திம்புவில் உள்ள விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார்.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டெல்லியில் நடந்த சம்பவம் அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளதாக வேதனை தெரிவித்தார். அந்தச் சம்பவத்தால், தான் மிகவும் கனத்த மனதுடன் பூடான் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தைத் தான் புரிந்துகொள்வதாகக் கூறிய அவர், முழு தேசமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் துணை நிற்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வேர் வரை விசாரணை நடத்தி உண்மைகளை கண்டுபிடிப்போம் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்.
















