திருப்பூரில் ஒப்புக்கொண்ட ஊதியத்தை வழங்காமல் இழுத்தடித்து வரும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்று வரும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என கடந்த 2 வாரத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாநகராட்சி மேயர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இனி வரும் காலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 613 ரூபாயும், ஓட்டுனர்களுக்கு 867 ரூபாய் கொடுத்து விடுவதாக உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊதிய தொகையை வழங்காமல் தனியார் நிறுவனம் அலைக்கழித்து வருவதாகக் குற்றம் சாட்டி, தூய்மை பணியாளர்கள் சாலையில் ஊர்வலமாகச் சென்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர்.
தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் குப்பைகள் அங்காங்கே தேங்கி உள்ளது.
















