நாட்டில் பயங்கரவாதிகளில் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீவிரவாதிகள் வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பை உருவாக்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விசாரணை வளையம் விரிவடைந்துள்ள நிலையில், அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 19ம் தேதி, ஸ்ரீநகரின் நவ்காம் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பிரச்சார சுவரொட்டிகள், பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தியதோடு, தீவிரவாத சித்தாந்தத்தையும் ஊக்குவித்தது… உஷாரான பாதுகாப்புப் படையினர், சல்லடை போட்டுக் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தினர். உள்ளூர் போலீசார் உதவியுடன் விசாரணையையும் முடுக்கிவிட்டனர். சட்டவிரோத நடவடிக்கைகளை ஈடுபடுவோர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள்மீது கைது நடவடிக்கை பாய்ந்தது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட விசாரணை, பல மாநிலங்களில் பரந்து விரிந்தது. இதன் காரணமாகத் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர்கள் அடில் அகமது ராதர், முசம்மில் அகமது கானாய் ஆகியோர் விசாரணை வளையத்திற்கு வர, அவர்களிடமிருந்து பயங்கர வெடிமருந்துகள், அதிநவீன துப்பாக்கிகள், டைமர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் வெள்ளை காலர் பயங்கரவாத வலையமைப்பைத் தீவிரவாதிகள் உருவாக்கியிருப்பதையும், சந்தேகமின்றி சதித்திட்டத்தை அரங்கேற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள், மதகுருமார்கள் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களை ஆயுதமாகப் பயன்படுத்தி திட்டமிட்டிருப்பதையும் தற்போதையை கைது நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது ,அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத அமைப்புகள், வெள்ளை காலர் பயங்கரவாத வலையமைப்பு உருவாக்கியிருக்கக்கூடும் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் ரணங்கள் இன்னும் ஆறாத நிலையில், டெல்லியும், அதன் அருகில் உள்ள நகரங்களும் தீவிரவாதிகளின் இலக்காக மாறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை, தொடர் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதும் தெளிவாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்சேர்ப்புக்கு உதவியதாக ஷோபியனைச் சேர்ந்த ஒரு மதகுருவும், ஸ்ரீநகரைச் சேர்ந்த பல செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளுடனும், பிற நாடுகடந்த ஜிஹாதி அமைப்புகளுடனும் பயங்கரவாதக் குழுவுக்குத் தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
எல்லைப் பகுதிகள் மற்றும் கிராமப்புற காஷ்மீரில் இருந்து நகர்ப்புற ஊடுருவலுக்கு பயங்கரவாத நடவடிக்கைகள் நகர்ந்து வருவதற்கான மற்றொரு அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. படித்த பயங்கரவாத செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் மத்தியில் மறைந்து, ரகசிய வலைப்பின்னல்களை உருவாக்கத் தங்கள் பதவிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்து.
















