ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவிற்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
6 நாட்கள் அரசுமுறை பயணமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அங்கோலாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் மற்றொரு ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவிற்கு சென்றடைந்தார்.
தலைநகர் காபோரோன் சென்றடைந்த அவரை, அந்நாட்டின் அதிபர் டுமா கிதியோன் போகோ கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் விமான நிலைய வளாகத்தில் வழங்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து வெளியே வந்த குடியரசு தலைவருக்கு, நடன கலைஞர்கள் பாரம்பரிய உடையில் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களும் இன்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















