இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.
பிரேசிலின் பெலிமில் நடந்த பருவநிலை மாற்ற அமர்வின் 30வது மாநாட்டில் ஜெர்மன்வாட்ச் என்ற சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம், ‘பருவநிலை அபாய குறியீடு 2026’ எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், 1995 முதல் 2024ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்கள் அதிகம் பாதித்த நாடாக டொமினிகா உள்ளது. அதைத்தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைட்டி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா நாடுகள் உள்ளன.
இதற்கு அடுத்ததாக, 9வது இடத்தில் இந்தியாவும், 10வது இடத்தில் பஹாமாஸ் நாடுகளும் உள்ளன. இந்தியாவில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 430 இயற்கை பேரிடர்களில் சிக்கி 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















