டெல்லியில் தமிழ் சங்க பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மோசடி நிகழ்ந்தது தெரியவந்ததையடுத்து, அம்மாநில அரசு மானிய உதவிகளை நிறுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் வசிக்கும் தமிழர்களுக்காக, டெல்லி தமிழ் கல்வி சங்கம் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் பிற செலவினங்களுக்கு அம்மாநில அரசு தொடர்ந்து மானிய உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஏழு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் என 100 பேரை நியமித்து அதற்கான பட்டியலை கல்வி சங்கம் டெல்லி அரசுக்கு அனுப்பியது.
அதை டெல்லி பள்ளி கல்வித்துறை பரிசீலித்தபோது, அடிப்படை விதிகள் மீறப்பட்டு தகுதியே இல்லாதவர்களுக்கு நேர்காணல்கள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
டெல்லி பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் இயக்குநர் உதித் பிரகாஷ் ராயின் மனைவிக்குப் போலி ஆசிரியர் அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பித்து, டெல்லி தமிழ் கல்வி சங்கப் பள்ளியில் ஆசிரியராக நியமித்த முறைகேடும் அம்பலமானது.
இதையடுத்து டெல்லி தமிழ் கல்வி சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளுக்கான மானிய உதவிகளை, டெல்லி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், புதிதாகப் பணி நியமனங்களை தொடங்கும்படி உத்தரவிட்டுள்ள டெல்லி அரசு, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் தேர்வு செய்யப்படாவிட்டால் மானிய உதவிகள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
















