பவளவிழா பாப்பா… நீ நல்லவர்போல் நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா எனத் திமுக அரசின் மீது தவெக தலைவர் விஜய் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளதாக விமர்சித்துள்ளார்.
இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, தவெகவை தூற்றுவதே என்றும், மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வரும் ஓர் இயக்கத்தைக் கண்டால், ஆளும் கட்சியினரின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும் எனவும் கூறியுள்ளார்.
திமுக விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டியதால், அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாக மாறியதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட தவெகவை திட்டவைத்து ஆளும் கட்சியினர் அகமகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் திமுக அரசின் அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, மக்கள் சக்தியின் மதிப்பை அவதூறு மன்னர்களுக்கு உணர செய்வோம் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
















