டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 9 பேரை பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்ததாகக் கருதப்படும் மருத்துவர் உமர் நபி, தாக்குதலுக்கு முன்னர் துருக்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெடித்து சிதறிய ஐ-20 கார், ஃபரிதாபாத் அல் ஃபலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் 11 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதி உமர் நபியின் கூட்டாளிகள் பணியாற்றி வந்த அல் ஃபலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த 4 மருத்துவர்களும், அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த நிலையில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைதான மருத்துவர்கள் 4 பேருக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அல் ஃபலா பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், டெல்லியில் நடந்த துரதிருஷ்டவசமான நிகழ்வுகளால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்ததாகவும், கார் வெடிப்புச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கிடையே, கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான லக்னோ பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் உடன் தொடர்பில் இருந்த 9 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















