டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், டெல்லியில் கார் வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கார் வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என அறிவித்தார்.
அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை அமைச்சரவை கண்டிப்பதாகவும், பயங்கரவாத தாக்குதலில் வெளிநாடுகளின் சதி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பயங்கரவாதத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என்ற கொள்கையில் நாடு உறுதியாக உள்ளதை அமைச்சரவை மீண்டும் தெளிவுபடுத்துவதாகவும், பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறினார்.
டெல்லி தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய டெல்லி தாக்குதல் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
















