போட்ஸ்வானா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் தனியார் துறை பங்களிப்பு தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
அங்கோலா, போட்ஸ்வானா நாடுகளுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 6 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு போட்ஸ்வானா சென்றடைந்த அவருக்கு, தலைநகர் கேபரோனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபர் டுமா போகோ மற்றும் பிரதிநிதிகளுடன் திரௌபதி முர்மு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து டுமா போகோ உடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருநாடுகள் இடையே சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முன்னதாக, கேபரோனில் உள்ள வைர வர்த்தக நிறுவனத்திற்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, வைர கற்களை அந்நாட்டு அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து போட்ஸ்வானா நாட்டின் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசியவர், போட்ஸ்வானா நாட்டினை கட்டியெழுப்பும் பயணத்தில் இந்தியா நண்பனாக இருப்பதாக தெரிவித்தார்.
கல்வி, விவசாயம், சுகாதாரம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளதாகவும் போட்ஸ்வானாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் தனியார் துறை பங்களிப்பு தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் கூறினார்.
















