டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி பயங்கரவாத கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பயங்கரவாதத்தோடு தொடர்புடைய சம்பவம் என்பதால் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின்பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, பல்வேறு விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், பயங்கரவாத மருத்துவர்கள் குழுவில் இணைந்திருந்த உமர் நபி என்பவர் காரில் வெடிபொருட்களை எடுத்து சென்று செங்கோட்டை அருகே வெடிக்க செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு கார் ஹரியானாவின் கந்தாவலி கிராமத்திற்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. DL10CK0458 என்ற கொண்ட சிவப்பு ஈக்கோஸ்போர்ட் வகை கார் டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் ஆர்டிஓ அலுவலகத்தில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது என்றும், காரை வாங்க உமர் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு போலி முகவரியைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அம்மோனியம் நைட்ரேட் போன்ற வெடிபொருட்களை சேமித்து வைக்க சிவப்பு நிற காரை உமர் நபி பயன்படுத்தியதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உமர் நபியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சேகரித்த டிஎன்ஏ மாதிரிகளை, குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
















