தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மோதல் வழக்கில் ஜாமின் பெற வந்த திமுக நகரமன்ற துணை தலைவரின் கணவரைக் கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
எனினும் இத்திட்ட ஒப்பந்தத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறி பேரூராட்சியின் துணை தலைவர் ஞானமணியின் கணவர் தமிழன், பேரூராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாகப் பேரூராட்சியின் துணை தலைவர் ஞானமணியின் கணவர் தமிழன், அவரது மகன் ஸ்டீபன் உள்ளிட்டோர் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஸ்டீபன் ஏற்கெனவே ஜாமின் பெற்ற நிலையில், தமிழன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஆகியோர் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இருவரையும் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே இருவரும் நெஞ்சுவலி உள்ளதாகக் கூறியதை அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
















