சீன எல்லை அருகே கட்டப்பட்ட இந்தியாவின் நியோமா விமானப்படை தளம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட கடும் மோதலைத் தொடர்ந்து, எல்லையில் இருதரப்பும் படைகளைக் குவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
இதனையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் டெம்சோக், டெப்சாங் தவிர பிரச்சனைக்குரிய பிற இடங்களிலிருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. பின்னர், இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையிலும், சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாகவும் கிழக்கு லடாக்கில், ராணுவத்தை இந்தியா வலுப்படுத்தத் தொடங்கியது.
அதன் ஒருபகுதியாகச் சீனாவையும், இந்தியாவையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடருகே உள்ள நியோமாவில், 13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் 214 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விமானப்படைத் தளத்தை இந்தியா அமைத்து வந்தது.
இந்நிலையில், பணிகள் முடிந்து நியோமா விமானப்படை தளம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சீன எல்லைக்கு மிக அருகே இந்திய ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், 3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையுடன் விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
















