பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்திற்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளதால் அக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றன. இந்தத் தேர்தல்களில் மொத்தம் 67 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களையும் தாண்டி 200-க்கும் மேற்படஇடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
அதில் பாஜக 95 இடங்களிலும் முதலமைச்சர் நிதிஷ்குமாரியின் ஐக்கிய ஜனதா தளம் 84 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணி வெறும் 32 இடங்களின் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது..
இதனிடையே கருத்து கணிப்பில் கூறப்பட்ட இடத்திற்கு மேல் என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனப் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறப்பட்டன.
ஆனால் எதிர்பார்த்ததைவிட தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதேபோல் மகாகத்பந்தன் கூட்டணி 73 முதல் 91 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், 29 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
அதேபோல, பீகார் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்ட 101 தொகுதிகளில் 95 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி 84 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளதை அடுத்து பாட்னாவில் உள்ள ஐக்கிய தன தள கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி கொடியை அசைத்தும், முதலமைச்சர் நிதிஷ்குமாரின் புகைப்படத்தை ஏந்தியும் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல் பீகாரில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவானதை அடுத்து தலைநகர் பாட்னாவில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் உருவம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். மேலும் பாஜக பெண் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்கியும் பாட்டு பாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
















