பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி நிதீஷ்குமார் தீட்டிய திட்டங்களும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளுமே பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. வாக்குத்திருட்டு எனும் நாடகத்தை அரங்கேற்றி அதன் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடலாமென கனவில் மிதந்த இந்தியா கூட்டணியை எளிதாக வீழ்த்துவதற்கு காரணமாக இருந்த காரணங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி மலரும் என முழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி… காட்டு ராஜ்ஜியத்தை திணித்தவர்களின் கைகளில் பீகார் கிடைக்குமா அல்லது வளர்ச்சியடைந்த பீகார் எனும் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் நிதிஷ் மற்றும் மோடி கைகளில் நீடிக்குமா ? எனக் கர்ஜித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இருபெரும் தலைவர்களின் கருத்தை உதாசீனமாக எதிர்கொண்டு வெற்றி எனும் கனவில் இருந்த இண்டி கூட்டணிக்குப் பீகார் தேர்தல் முடிவுகள் தகுந்த பாடத்தைப் புகட்டியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இண்டி கூட்டணியின் தோல்விக்கு இருக்கும் ஓராயிரம் காரணங்களைப் போலவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கும் ஒரு சில காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களும், நல்ல அனுபவமிக்க மூத்த அரசியல்வாதி நிதீஷ்குமார் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் மிக முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
நிதீஷ் குமார் பதவியேற்ற பின், பெண்களுக்கான சைக்கிள் வழங்கும் திட்டம், மதுவிலக்கு என பெண்களை மையப்படுத்தியே நிதிஷ்குமார் அறிமுகப்படுத்திய திட்டங்கள் அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பிங்க் கழிவறைகள், பிங்க் பேருந்துகள், பெண்கள் சந்தை, பெண்களுக்கான விடுதிகள் மற்றும் மினி ரிக்ஷா வாங்குவோருக்கு மானியம் என ஏராளமான திட்டங்கள் பீகாரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் பீகாரின் முதல்மந்திரி மகிளா ரோஜ்கார் யோஜனா எனும் மகளிர் சுய உதவித் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கியது நிதீஷ்குமாருக்கான பெண்களுக்கான வாக்கு வங்கியை மேலும் வலுவாக்கியது.
உடல்நலக்குறைவு மற்றும் உடல்நலன் குறித்த வதந்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பிய நிலையிலும், பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு என அனைத்து இடங்களிலும் நிதிஷ்குமார் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி யாதவின் வயதை விட இருமடங்கு பெரியவராக இருந்தாலும், அவருக்குச் சற்றும் சளைத்தவரல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் இருந்த நிதீஷ்குமாரின் தேர்தல் பணிகள் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளன.
ஒவ்வொரு வீட்டிற்கும் மாதந்தோறும் 125 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, விதவைகள் மற்றும் முதியோருக்கான ஓய்வூதியம் உயர்வும் பீகார் மக்களின் கவனத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் திருப்பியது. அதிலும் கடந்த சில மாதங்களில் மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூலம் 95 ஆயிரம் ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டதும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்குச் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தியும் மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இளம் அரசியல்வாதியாக அறியப்பட்ட சிராக் பஸ்வான் தன்னுடைய தந்தை வழியில் அரசியல் திறமையை நிரூபித்துக் காட்டியிருப்பதோடு இந்தத் தேர்தலின் மூலம் பீகாரில் நான்காவது பெரியகட்சியாகவும் தனது கட்சியை உருவாக்கியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 இடங்களையும் வென்ற லோக் ஜனசக்தி அதற்போது போட்டியிட்ட இடங்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. மேலும் ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ மாற வேண்டிய குழந்தைகள் குண்டர்களாக மாறுவார்கள் எனவும் பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.
மேலும் துப்பாக்கி, வன்கொடுமை, கசப்பான அனுபவம், ஊழல் ஆகியவையே ஆர்ஜேடி ஆட்சியின் மையமாகத் திகழும் எனப் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களும் அம்மாநில மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன. அதோடு வாக்குத்திருட்டு எனும் ஒற்றை நாடகத்தை அரங்கேற்றி வெற்றிபெறலாம் என்ற கனவில் இருந்த இண்டி கூட்டணி, அதனையே தன்னுடைய பிரச்சாரத்தில் முழுமையாக முன்னிறுத்தியது. ஆனால் தேர்தலன்று இண்டி கூட்டணி முன்னெடுத்த வாக்குத் திருட்டு பிரச்சாரத்தை மக்கள் துளியளவும் பொருட்படுத்தவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
















