பீகாரைப் போல் தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 202 தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, பிரதமர் மோடி தன் கையில் இருந்த துண்டை தொண்டர்களை நோக்கி காண்பித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பெரும் வரலாற்று வெற்றியை பெற்று, தாம் மக்களின் சேவகர்கள் என்றும் கடின உழைப்பால் மக்களின் இதயங்களை திருடி விட்டதாகவும் கூறினார். பீகார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டதாகவும், நாட்டுத் துப்பாக்கி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என மக்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இனி ஒருபோதும் ஆர்ஜேடி அரசு மீண்டும் வரப்போவது கிடையாது என்றும், இந்தத் தேர்தல், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், பொய் குற்றச்சாட்டு, சாதிவாரி, பிரிவினைவாத கொள்கைகளை காங்கிரஸ் பின்பற்றுவதாகவும், இதுபோன்ற காங்கிரஸ் மீண்டும் பிளவுபட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
பீகாரைப்போல் தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என சூளுரைத்த பிரதமர் மோடி, கேரளா, மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பீகார் வெற்றி எதிரொலிக்கும் என குறிப்பிட்டார்.
















