14ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பைக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டி வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது. இதனையொட்டி, கடந்த 5ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட வெற்றிக் கோப்பை, தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது.
மதுரை வந்தடைந்த வெற்றிக் கோப்பையை மாவட்ட நிர்வாகம், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என அனைவரும் வரவேற்றனர். பூக்களை தூவி, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற பல்வேறு பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வெற்றிக் கோப்பை, இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர், காமராஜர் சாலை, தெப்பக்குளம், குருவிக்காரன் சாலை, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று, இறுதியில் மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தை வந்தடைய உள்ளது.
















