பழங்குடியினர் சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் உலிஹாட்டு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் பிறந்த பிர்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைக்கு எதிராகப் போராடினார். 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்கப் போராடினார்.
இதனால், ‘நிலத்தின் தந்தை’ எனப் பழங்குடியினரால் அழைக்கப்பட்டார். பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாஜக எம்பிக்கள் ராம்வீர் சிங் பிதுரி, பன்சூரி ஸ்வராஜ் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நாட்டின் சுதந்திரப் போரட்ட வீரர் பிர்சா முண்டாவின் பங்களிப்பை ஒட்டுமொத்த தேசமும் மரியாதையுடன் நினைவு கூர்வதாகத் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிரான அவரது போராட்டமும் தியாகமும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகத்தை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
















