கிருஷ்ணகிரியில் மகனை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டு திருப்பத்தூரில் வசித்து வந்தார்.
இதையடுத்து ஏப்ரல் மாதம் சமாதானம் பேசுவதற்காகச் சுபாஷின் தந்தை தண்டபாணி, இருவரையும் வீட்டிற்கு வரவழைத்தார்.
அப்போது சுபாஷ் மற்றும் அவரது பாட்டி கண்ணம்மாளை தண்டபானி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தார். சுபாஷின் மனைவி படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பியோடினார்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தய இந்த ஆணவப் படுகொலை சம்பவத்தில் தண்டபாணியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
















