மதுரை மத்திய சிறையில் சினிமா பாணியில் செல்போனை பதுக்கி சிறைக்குள் எடுத்துச்சென்ற விவகாரத்தில் 3 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர், அறையில் செல்போன் பயன்படுத்துவதாக சிறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, கைதிகளின் அறைகளில் போலீசார் தனித்தனியாக சோதனையிட்டபோது, செல்வபாண்டி என்பவர் அறையின் கழிவறையில் இருந்து செல்போன், சிம்கார்டு மற்றும் பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, செல்வபாண்டியிடம் நடத்திய விசாரணையில், அவரது அறையில் இருந்த தண்டனை கைதிகளான முத்து இருள் மற்றும் குமார் ஆகியோர், செல்வபாண்டியிடம் செல்போனை கொடுத்து கழிவறையில் மறைத்து வைத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















