வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், நவம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழகத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் முன்னதாக உருவான புயல் சின்னமானது தமிழகத்தை தாக்கும் என அஞ்சப்பட்ட நிலையில், அது ஆந்திரப் பகுதியை கடுமையாகத் தாக்கியது.
இந்நிலையில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி, இன்று மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளைக் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் மிகக் கனமழைக்கும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மிகக் கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
















