பாகிஸ்தானின் 27-வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக உள்ள அசிம் முனீரின் பதவிக்காலம் வரும் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தற்போது அவர் பீல்டு மார்ஷல் என்ற அந்தஸ்தில் உள்ளார். அந்த வகை உயர் பிரிவுக்குப் பதவி நீட்டிப்பு செய்ய, பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின் 243வது பிரிவு முட்டுக்கட்டையாக இருந்தது.
அதில் திருத்தம் செய்யும் 27வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை ஷெபாஸ் ஷெரீப் அரசு, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நிறைவேற்றியது.
இந்தச் சட்டத் திருத்தம் அணு ஆயுதம் முதல் நாட்டின் நீதித்துறை வரையிலான அதிகாரங்கள் அனைத்தையும் ராணுவ தளபதிக்கே வழங்க வழிவகை செய்கிறது. இந்நிலையில் இந்தச் சட்டத் திருத்தம் பாகிஸ்தானின் அரசியலமைப்பின் மீதான கடுமையான தாக்குதல் என அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மன்சூர் அலி ஷா மற்றும் அதர் மினல்லா ஆகியோர் கூறியிருந்தனர்.
மேலும், சட்ட திருத்தத்துக்கு எதிராக அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதனைப் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்துள்ளார்.
















