வரும் 2047-ம் ஆண்டு இந்தியாவின் 100-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது பழங்குடியின மக்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறுவார்கள் என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் பெருமை தினம் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் உருவான தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அப்பொது பழங்குடியின மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், சுதந்திரத்திற்காகவும் போராடிய பிர்சா முண்டாவின் திருவுருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பழங்குடியின மக்கள் சார்பில் அவருக்குத் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, பழங்குடியின மக்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியுள்ளதாகத் தெரிவித்தார்.
விடுதலை போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்கு மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஆளுநர் ஆர்.என் ரவி, அவர்களின் தியாகங்களை நாம் மறந்தது துரதிஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டார்.
பழங்குடியின மக்களிலிருந்து ஒரு சிலரே ஐஐடி வரை வரும் நிலையில், அந்த சமுதாயத்திலிருந்து மேலும் ஏராளமானோர் ஐஐடி-க்கு வர முயல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, வரும் 2047-ம் ஆண்டு இந்தியாவின் 100-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது பழங்குடியின மக்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறுவார்கள் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
















