பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்கள் சிலர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும், அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
சந்தேஷ் தொகுதியில் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் ராதா சரண் ஷா, ஆர்.ஜே.டி.யின் திபு சிங்கை வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ராம்கர் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சதீஷ் குமார் சிங் யாதவ், பாஜகவின் அசோக் குமார் சிங்கை வெறும் 30 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அகியான் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் மகேஷ் பாஸ்வான் சி.பி.ஐ.எம்.எல் வேட்பாளர் ஷிவ் பிரகாஷ் ரஞ்சனை வெறும் 95 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். டாக்கா தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடியின் பைசல் ரஹ்மான், பாஜகவின் பவன் குமார் ஜெய்ஸ்வாலை 178 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஃபோர்ப்ஸ்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோஜ் பிஷ்வாஸ் 221 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வித்யா சாகர் கேசரியை தோற்கடித்தார்.
ருபாலி தொகுதியில் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் கலதர் பிரசாத் மண்டல், ஆர்ஜேடியின் பீமா பார்தியை 73 ஆயிரத்து 572 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
திகா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சஞ்சீவ் சௌராசியா, 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, சிபிஐஎம்எல் வேட்பாளர் திவ்யா கௌதமை 59 ஆயிரத்து 79 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கோபால்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜே.டி.யு வேட்பாளர் ஷைலேஷ் குமார் விஐபி கட்சியின் பிரேம் சாகரை 58 ஆயிரத்து 135 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
சுகௌலி தொகுதியில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர் ராஜேஷ் குமார், ஜனசக்தி ஜனதா தளத்தின் ஷியாம் கிஷோர் சவுத்ரியை 58 ஆயிரத்து 191 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அவுராய் தொகுதியின் பாஜக வேட்பாளர் ரமா நிஷாத், விஐபி கட்சியின் வேட்பாளர் போகேந்திர சாஹ்னியை 57 ஆயிரத்து 206 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
















