கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், சபரிமலை வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது, மூக்கிற்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை காலம் நாளை துவங்குகிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
மண்டல பூஜை காலத்தில், 41 நாட்கள் கோவில் திறந்திருக்கும் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை தரவுள்ளனர்.
ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு, தங்கும் இடம், உணவு, குடிநீர், கழிப்பிடம் என அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் பரவி வருவதால் சபரிமலை வரும் பக்தர்களுக்காக சில வழிகாட்டுதல்களை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி சபரிமலை வரும் வழியில், ஆறுகளில் குளிக்கும்போது, மூக்கிற்குள் தண்ணீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும், மலை ஏறும்போது மெதுவாகவும் இடைவெளி விட்டும் ஏற வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
















